Description
ஓட்டமாவடி அறபாத் (1970) கிழக்கிலங்கையின் சமகால முன்னணிப் படைப்பாளர்களுள் ஒருவர். அரபுமொழியிலும் இஸ்லாமிய மார்க்க ஞானத்திலும் தேர்ச்சிபெற்ற ஒரு மௌலவி. பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பட்டதாரி. பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர். கவிதை, சிறுகதை, சுயசரிதைப் பதிவுகள், சமய ஆய்வுகள் என இதுவரை 12 நூல்கள் வெளியிட்டுள்ளார்.
1980களின் இறுதியில் எழுதத் தொடங்கிய அறபாத், கவிதை, சிறுகதைத் துறையில் ஆழக் காலூன்றியவர். எரிநெருப்பிலிருந்து (1996), வேட்டைக்குப் பின் (2004) ஆகிய கவிதைத் தொகுதிகள் இவரைக் குறிப்பிடத்தகுந்த கவிஞராக அடையாளப்படுத்தின.
சிறுகதைத் துறையில் அறபாத்தின் பங்களிப்பு முக்கியமானது. நினைந்தழுதல் (1998), ஆண்மரம் (2001), உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி (2008) ஆகிய சிறுகதைத் தொகுதிகள், இவர் யதார்த்த மரபில் காலூன்றிய நல்ல சிறுகதையாசிரியர் என்பதை உறுதிப்படுத்தின. மண்ணோடு போய் இவருடைய மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று. அதை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்ப்பித்து லங்கன் மொஷய்க், அசல்வெசி அப்பி ஆகிய தொகுப்புகளில் ஏற்கனவே சேர்த்திருந்தேன்.
பதினேழு புதிய சிறுகதைகளைக் கொண்ட புத்தரின் நிழல் என்ற இத்தொகுதி அறபாத்தின் இலக்கிய முதிர்ச்சியைக் காட்டும் பல கதைகளைக் கொண்டுள்ளது. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பல்வேறு வாழ்க்கைக் கோலங்களை, யுத்தத்தின் வடுக்களைப் பதிவுசெய்துள்ள கதைகள் இவை. சலிப்பில்லாமல் கதைசொல்லும் திறன் அறபாத்துக்குக் கைவந்துள்ளது. வெவ்வேறு கதைசொல்லும் பாணிகளைக் கையாண்டுள்ளார். பின்நவீனச் “சோதனை”யிலும் அக்கறைகாட்டியுள்ளார். இலக்கியச் செழுமையும் செய்நேர்த்தியும் மிக்க இக்கதைகள் தேர்ந்த வாசகருக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எம். ஏ. நுஃமான்



Reviews
There are no reviews yet.