அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில்/தீவுக்காலை வண்ணார் சமூக மக்களைப்பேசும் இந்நாவல் முழுக்க முழுக்க அம்மக்களுக்கேயுரிய பேச்சு மொழியிலேயே அமைந்திருக்கிறது. படித்தவுடன் சில சொற்கள் புரியாவிடினும் கதையின் ஓட்டத்தில் அவற்றின் பொருள் புரியும்படியாகவே அமைந்திருந்தமை சிறப்பு.
கதையின் நாயகியாக வரும் பரஞ்சோதி ஒரு வண்ணார் சமூகப்பெண்ணாக இருக்கிறாள். அவளைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள இந்நாவலில் சமூகத்தின் விளிம்பு நிலை வண்ணார் சமூக மக்களை, அவர்களது வாழ்வியலை, உளவியற் துன்பங்களை, அச்சமூக பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை, சமூக அநீதியை எதிர்த்து நிற்க இயலாத அவர்களின் பலவீனங்களை நாவலாசிரியர் மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இருந்தும் நாவலின் திருப்பு முனையாக அமைந்த ஒரு சம்பவத்தை ஆசிரியர் ஏதோவொரு சினிமாப்பாணியிலான காட்சியாக வர்ணித்திருப்பதுதான் சிறு நெருடல்.
கதை நாயகி பரஞ்சோதி ஒரு பதினெட்டு வயதுப்பெண். அவள் தன்னை வன்புணரும் ஒருவனை கனவென நினைத்து அனுமதிப்பதென்பதும் கர்ப்பம் தரிக்கும் வரை அது கனவா நினைவா என அறிய முடியாத நிலையிலிருந்தாள் என்பதுவும்
ஒரு பெண்ணாக என்னால் ஏற்கவே முடியாததொன்றாகவே இருக்கிறது. இச்சம்பவத்தை வேறொரு கோணத்தில் யதார்த்தமாக அமைத்திருக்கலாம் என்பதே என் கருத்து.
மொத்தத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மெல்லிய விசும்பலாக மேலெழுகின்ற
இந்நாவலின் இரண்டாம் பதிப்பை காலத்தின் தேவைக்கருதி வெளியிட்டிருக்கிறது கஸல் பதிப்பகம்.