வெள்ளாவி விமர்சனம் – By Issath

போர் சூழலில் வாழ்ந்த, தன்னைச் சுற்றி வாழும் சமூகத்தையும், அபலைகளையும் எவ்வித பாகுபாடுமின்றி நேசிக்கும் ஒரு படைப்பாளி விளிம்புநிலை வாழ்வினை வாழும் மனிதர்களுக்கென; ஆசிரியரின் மொழியில் சொல்வதானால் “ஊடூஊடாப் போய் புடவையெடுத்து வந்து தூமை வெளுத்து உழைக்கும்” மக்களுக்கென தந்த படைப்புதான் “வெள்ளாவி“.

நாவலில் கோளாவில் பேச்சு வழக்கு மொழி நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருப்பதை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு வந்ததை வைத்தே அடையாளம் கண்டு கொண்டேன்.

நாவல் முழுதும் குரலற்ற, பொருட்படுத்தப்படாத மக்களின் குரலாகவே ஆசிரியரின் எழுத்து விரவிக்கிடக்கின்றது. தன் ஆயுள் முழுதும் தூமை வெளுத்து, நோய்நொடிப்பட்டு சிகிச்சைக்குப் பணமில்லாது மாண்டு போகும், அவலம் நிறைந்த வாழ்வை வாழும் மக்களின் வாழ்வியல் மிக நேர்த்தியாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது.

மேட்டுக்குடி வர்க்க மனநிலையில் வாழும் போடியார், அவரின் குடும்பம், விதி வசத்தால் அப்பன் பெயர் தெரியாத கருவை சுமக்கும் மாதவி, அந்தக் கருவின் மூல உயிரான பரஞ்சோதி, பரஞ்சோதி சுமந்த பிள்ளையான அரவிந்தனில் உசிரையே வைத்திருக்கும் நாகமணி, வண்ணார் பரம்பரையில் படித்து உத்தியோகத்தில் இருக்கும் சதாசிவம் என தேவைக்கேற்ற பாத்திரபடைப்புக்கள்.

நாகமணி பரஞ்சோதியை “பாய்ஞ்சோயி” என அழைப்பதெல்லாம் பேச்சு வழக்கில் ஆசிரியர் எவ்வளவு கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு உதாரணம்.

கோளாவில் வண்ணார மக்கள் ஏசி தூற்றுவதை பேச்சு வழக்கில் வாசிக்கையில் நம்மை அறியாமலேயே நமக்கு சிரிப்பு வரவைக்கும்படியாக இருக்கின்றது. நிஜத்தில் அதுதான் பேச்சு வழக்கின் அழகியலும் கூட.அப்பன் பெயர் தெரியாது உருவான கருவையும் தன் ஒருசான் வயிற்றையும் நிரப்ப வேண்டி தன் வீட்டு செத்தையை பிராண்டும் ஆண்மக்களுக்கு இடம் கொடுக்கும் மாதவியின் சூழ்நிலை, மாதவியின் மீதான மிகையான நேசத்தின் காரணமாக பரஞ்சோதி சுமந்த பிள்ளையை தன் பிள்ளை போன்றே ஏற்று, அரவிந்தனின் நலனுக்காகவே பாடுபடும் நாகமணி, தீவுக்காலையில் என்ன நன்மை தீமை நடந்தாலும் அதை ஒவ்வொரு வீடாகப் போய் சொல்லும் “காசாத்தை பெத்தா”, போடியார் எனும் அங்கீகாரத்தை வைத்தே காமகலியாட்டம் ஆடும் போடியார் என கோளாவில் மக்களின் வறுமையும், அந்த கிராமத்து மக்களுக்கே உரித்தான வெள்ளந்தி மனதையும், ஆதிக்கவர்க்க மனநிலையையும் வாசகர்களை மிக இலகுவாக சென்றடையச் செய்திருக்கிறது ஆசிரியரின் எழுத்து.இந்த நாவலிற்கூடான எழுத்தின் மூலம் எதை எதையெல்லாம் தொட்டுச்செல்ல முடியுமோ அத்தனையையும் தவராமல் சொல்லிச்செல்கிறார் விமலன்.

யாழ்ப்பாணத்து உயர்சாதியினரிடம் இணைபிரியாது இருக்கும் சாதிப்பாகுபாடு, தூமை வெளுத்து, வறுமை நிலையில் வாழ்ந்தாலும் ஏழைமக்களுக்கென இருக்கும் உரிமைகள், கதைக்களம் பற்றிய வர்ணனைகள், கோளாவிலின் இயற்கை இடர்கள், ஏழ்மையிலும் கற்றதனால் வந்த சிறப்புக்கு உதாரணமாய் சதாசிவத்தின் வாழ்க்கை என்பன அவசியமான பதிவுகள்.“அண்டைக்கொரு நாள் புளியமரத்தடியில் சித்திரவதைப்பட்ட இளந்தாரிப் பொடியண்ட தோற்றம் திடீரென்டு அவள்ற கண்ணுக்குள்ள வர அந்த இளந்தாரிப் பொடியன போடியார் எண்டும், சுத்திநிண்டு சித்திரவதை செய்த பொடியனுகளுக்குள்ள மகன் அரவிந்தனும் நிக்கறாப் போலயும் நினைச்சிப் பாத்தவள் சட்டெண்டு சத்தம் போட்டு சிரிச்சிற்றாள்” எனநாவல் முடியும் தருவாயில் சொல்லியிருப்பது ஆசிரியர் போகிற போக்கில் பதிவு செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. பெரும்பாலான இளவயதினர் ஆயுதம் ஏந்தக் காரணம் தமது உரிமைகளைப் பெறுவதற்காக மாத்திரமல்ல தனிப்பட்ட பகை, தாய் தந்தை உடனான முரண்பாடுகளும்தான் என்பதையே இது காட்டியம் சொல்கின்றது.“அரவிந்தன்” தனக்கு சைக்கிள் வாங்கி தரவில்லை என்றால் தானும் இயக்கத்தில் இணைந்துவிடுவதாக மிரட்டுவதும் இறுதியில் வாங்கிய சைக்கிளை விற்கும் நிலை வந்ததும் சைக்கிளை விற்ற காசுடன் தான் இயக்கத்திற்கு போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு செல்வதையும் இதற்கு உதாரணமாகச்சொல்லலாம்.

மொத்தத்தில் மனித மனங்களில் உள்ள கசடுகளையும், கறைகளையும், சாதி வேறுபாடுகளையும் கழைந்து பொருட்படுத்தப்படாத, விளிம்புநிலை வாழும் அபலை மக்கள் மீதான மரியாதையையும், அன்பையும் கொண்டுவருவதுதான் உண்மையான “வெள்ளாவி” இன் பணியாகவும், இந்த நாவலின் வெற்றியாகவும் இருக்கும்.

நன்றி விமலன் என்கின்ற விமல் அண்ணனுக்கு

Leave a Comment